Tuesday 13 December 2011

மார்க்சியம்-சமதர்மம்

   மார்க்சியம் காலாவதியாகிவிட்டது  என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் மார்க்சியம் பற்றியே தொடர்ந்து பேசுகிறீர்கள் .மார்க்சியத்தின் பால் உங்கள் நம்பிக்கைக்கு என்ன காரணம் ? கேள்வி: யோக செந்தில் குமார் 
   மார்க்சியத்தின் மையம் என மார்க்சியம் முன்வைக்கும் சமதர்மம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன் .சமதர்மம் தான் மனித  அறம் மனிதர்களுக்கான அறம் . ஒரு தேசத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் சில அடிப்படையான தேவைகளை அரசு என ஒன்று இருக்குமானால் அது நிறைவு செய்யவேண்டும் ..அடிப்படைத் தேவைகள் என்று சொல்லும்போது ,உணவு ,உடை ,இருப்பிடம் ,வேலைவாய்ப்பு ,என்பனவற்றோடு நிறுத்திக்கொள்ள  முடியாது  அனைவருக்கும் கல்வி ,மருத்துவம் ,சுகாதாரம் ,வாழ்வுக்கான பாதுகாப்பு என்பனவும் தேவை .அடிமைத் தனம்  மனித வாழ்வின்  மாண்பை நாசமாக்கும் .எவ்வகை அடிமைத்தனமும் நமக்கு வேண்டாம் .எவ்வகையில்  ஆதிக்கம் நிலவினாலும் மனிதர்கள் அடிமைத்தனத்திற்கு உள்ளாக வேண்டும்.கலை,இலக்கியம் ,இல்லாமலும் மனிதனுக்கு வாழவில்லை இவையனைத்து மனிதருக்கும் உறுதி செய்யப்படவேண்டும் .
      இப்படிச் சொல்லும்போது இவற்றைத்தருவதற்கு ,இவற்றை உறுதி செய்வதற்கு அரசு தேவை என்றாகிறது .தன் மக்கள் மீது ஆதிக்கம் செய்வதாக எந்த   அரசும் இருக்க முடியாது .பெயரளவுக்கு ஜனநாயகம் என்று சொல்லி தேர்தல் முதலிய நெறிகள் மூலம் அதிகாரத்தை தனக்கென உறுதிப்படுத்திக்கொள்கிற அரசு நமக்கு வேண்டாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை எவ்வகையிலேறும் ஆதிக்கம் நிலவும் .சாதி மதம் முதலியனவும் ஆதிக்கத்தின் கருவிகள் .
     இப்படி மனித வாழ்வை தரமான முறையில் தகுதியான முறையில் வகுத்துக்கொள்வதற்கான தேசம் நமக்கு வேண்டும் சமூகம் நமக்கு வேண்டும் .இன்றுள்ள நிலையில் எத்தனையோ குறைபாடுகள் நிலவுகின்றன .அனைத்து மக்களுக்கும் நாம் பட்டியலிட்டபடி உணவு, கல்வி ,மருத்துவம் ,வேலைவாய்ப்பு  முதலிய வற்றை  ஒரு தேசம் என்ற முறையில் இந்திய அரசு உறுதிப்படுத்தும் என்ற முறையில் வைத்துக் கொண்டால் இந்தியாவில் இத்தனை ஊழல்கள் ,அரசதிகாரக்கொடுமைகள் ,பன்னாட்டு  நிறுவனங்கள் ,பெரும் பெரும்  முதலாளிகள் இருக்க முடியாது .இராணுவ கொடுங்கோன்மை  நடைபெற முடியாது .80 / 90  விழுக்காட்டு மக்களிடமிருந்து, அவர்களுக்கான வளமான வாழ்வு ,வேலைக்கு உறுதி, கல்வி வாய்ப்பு முழுமையான  மருத்துவவசதி  முதலியவற்றைப் பறித்த  நிலையில் தான் இந்தியாவில் இத்தகைய கொடுமைகள், ஊழல்கள் , இராணுவ  பெருக்கம் அணு ஆயுதப்பெருக்கம் ,பயங்கரவாதம் என்ற பெயரில் மக்கள்மீது ஒடுக்குமுறை  முதலியவை நிலவுகின்றன .தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன .காடுகள் அழிக்கப்படுகின்றன.எங்கும் சாக்கடைகள் ,மருத்துவமனையில் மக்கள் ,புதுவித நோய்கள் ,தற்கொலை ,மனநோய்கள் ,விபத்துக்கள் இவையெல்லாம் ஏன் ஏற்படவேண்டும்? இலவசக்கல்வி ஏன் தரப்படவில்லை ?.வறுமைகோட்டிற்கு கீழ்  40  விழுக்காட்டு மக்கள் ஏன் இன்றும் இருக்க வேண்டும்? .கிராமத்தில் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு ஊதியம் 30 ,40 ,50  அல்லது 100  இந்தியாவில் ஒரு பெரு முதலாளிக்கு ஒரு நாளைக்கு ஊதியம் ரூ .10 கோடி / 100  கோடி கறுப்பு பணத்திற்கு ஏதேனும் அளவு உண்டா ?
    நிதி நிறுவனங்களும் கொள்ளையடிக்க வேண்டுமா ? வங்கிகளை யார் கொள்ளையடிக்கிறார்கள் ? காஷ்மீரில் ஏன் எத்தனை லட்சம்  மக்கள் கொல்லப்படவேண்டும்? இப்படி ஆயிரம் கேள்விகள் நாம் கேட்கிறோம் .குறைந்த அளவுக்கேனும் 80 /90  விழுக்காட்டு உழைக்கும்  மக்களுக்கு அமைதியான உறுதியான கவுரவமான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இங்கு வாய்ப்புண்டா ? இன்னும் குழந்தைகள் சாவுத் தொகை குறையவில்லை . பெண்களின் அடிமைத்தனம் நீங்க வில்லை .சமயத் தலைவர்களுக்கு ஏன் கோடிக்கணக்கில் செல்வம்,அதிகாரம் ,நிலவுடமை? ,அந்நியர்களுக்கு ஏன் எல்லா உரிமைகளும்? இந்து முஸ்லிம் கலவரங்கள் ,சாதிச்சண்டைகளுக்கு என்ன தேவை? ஏற்றத்தாழ்வுகளை ,வர்க்க வேறுபாடுகளைத் தொடர்ந்து வைத்துக் கொண்டும் இவற்றை உறுதிப்படுத்திக்கொண்டும் இருக்கிற அரசு முறை பொருளியல் முறை ,முற்றாக ஒழிய வேண்டும் என்பதற்கான ஏதேனும் வழிமுறை பற்றி இங்கு தீவிர மான  சிந்தனை  உண்டா?கல்வி நிலையங்களில் இத்தகைய சிந்தனை  கற்றுத் தரப்படுகிறதா ? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எத்தனை பாதுகாப்பு!  எத்தனை வருமானம்! ?அரசியல்வாதிகள் என்ற பெயரில் எத்தனை இலட்சம் ஊதாரிகள் ஊழல் பேர்வழிகள்! ,மாபெரும் கடைத்தெருக்களில் எத்தனை ஆரவாரம் !. கிரிக்கெட் விளையாட்டுக்களில் எத்தனை ஆயிரம் கோடி வீண்செலவு! எதற்கு  இத்தனை திரைப்படங்கள்? தொலைக்காட்சிகள்?கோவில் திருவிழாக்கள்? இவையெல்லாம் ஒரு தேசத்தின் வாழ்வை மேம்படுத்துகிறதா?
        சமதர்மம் என்ற உணர்வுக்கு நான் தரும் அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை என் தனி வாழ்கையில் வைத்துப் பேசுவது பொருத்தமாகும் .நான் திரட்டியிருக்கும் அறிவு வளத்தை நானாகத் திரட்டிக் கொள்ளவில்லை .ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பலகோடி மக்கள் பலநூறு துறைகளில் சேகரித்த மாபெரும் அறிவுச்செல்வத்தின்  ஒரு சிறு துளி எனக்குள் இருக்கிறது .என் கலை உணர்வையும் இப்படித்தான் திரட்டிக்கொண்டேன் .என் வாழ்வுக்கு ஆதாரம் என்று தேடிப்பார்த்தால் உழவர்கள் நெசவாளிகள் என்று பல்லாயிரம் பேரைச்சொல்லவேண்டும்.என் உடல் நலத்திற்கும் நான் பெற்றுள்ள மருத்துவ வாய்ப்பிற்கும் நான் வாழும் வரலாற்றுச்சூழல் காரணம் .நெடுங்கால வரலாற்றுக்குள் நான் இருக்கிறேன் /இயங்குகிறேன் .மாபெரும் சமூகம் என்னைத் தாங்குகிறது.என்னைத்தாங்கும் மக்களும் பல்லாயிரவர். .இப்படி இருக்க என் அறிவோ ,கலை உணர்வோ என் உடைமை என்று கருதி இதற்காகப் பெருமை பேசி, இந்த உடைமைக்கு கூலி வாங்கி, அல்லது இலாபம் சேகரித்து, பலரை எனக்கு கூலிகளாக்கி ,பலரை வஞ்சித்து, பலர் மேல் அமர்ந்து ஒரு எழுத்தாளன் என ஒரு ஆசிரியன் என நான் எப்படி வாழ  முடியும் .கல்வியாளர்கள் அறிஞர்கள் முதலியவர்களிடம் வேறு என்ன நான் எதிர்பார்க்கமுடியும் சமதர்ம  உணர்வில்  தான் நமக்குள் தழைக்க  முடியும். இந்த உணர்வோடுதான் தேசத்தையும் நான் பார்க்கிறேன் .
     ஓர் இலக்கியவாதி என்ற முறையிலும் சமகால அரசியலில் அக்கறையுடையவன்  என்ற முறையிலும் சமதர்மம் என்ற பேருணர்வை இழந்து விடாமல்  தேசம், அரசியல் ,சமூகம் இலக்கியம் ,முதலியவற்றை  நான் பார்க்கிறேன் .இந்தத்தேசத்தில் உள்ள ஆக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியதில் உழைக்கும் மக்களுக்கும் அறிஞர்களுக்கும் கலைஞர்கள் முதலியவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு . இவர்களுக்கு குறைந்த அளவுக்கேனும் நிறைவான வாழ்க்கை பெறுவதற்கு முழு உரிமை உண்டு .இவர்களுக்கானது இந்தத்தேசம்  இயற்கை ,நிலம் ,நீர் , அனைத்திலும்  இவர்களுக்கே முதல் உரிமை . அந்நியர்  படையெடுத்து வந்து இவர்கள் தேசத்தையும் இவர்களையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்துவது போல இந்த நாட்டில் உள்ள முதலாளிகளும் அரசியல்வாதிகளும் சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகள்  முதலியவர்களும் இந்த உழைக்கும் மக்கள் மற்றும் அறிவாளிகளிடமிருந்து இந்தத்தேசத்தையும் இவர்களின் உரிமைகளையும் இவர்களின் சுதந்திரத்தையும் வாழ்வையும் அபகரித்து ,அடிமைப் படுத்தித், தமக்கான  வாழ்வையும் அதிகாரத்தையும் உருவாக்கிக் கொண்டிருப்பதை எப்படி பொறுத்துக்  கொள்ள முடியும் . இம்மக்களின் வாழ்வு வளர்ச்சி விடுதலை என்ற உணர்வை மையத்தில் இருத்தித்தான் இந்திய அரசு முதலாளியம் முதலிய வற்றை நாம் விமர்சனம்  செய்கிறோம் .நம் நெஞ்சில் இருப்பது சமதர்ம உணர்வு . தொன்ம இலக்கியம் சமயம் முதலிய எல்லாவற்றையும் இந்த உணர்விலிருந்து தான் நாம் பார்க்கிறோம் . முதலாளியச்சூழலை மாற்றுவதன் மூலமே சமதர்ம சமூகத்தை படைக்க முடியும் .ஒரு எழுத்தாளன் ஒரு ஆசிரியன் என்ற முறையில் என்னுடைய விருப்பமும் தேவையும் இதுவாகத்தான் இருக்கிறது .ஆகவே தான் சமதர்மம் பற்றி ஓயாமல் பேசுகிறேன் .

2 comments:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பலகோடி மக்கள் பலநூறு துறைகளில் சேகரித்த மாபெரும் அறிவுச்செல்வத்தின் ஒரு சிறு துளி எனக்குள் இருக்கிறது

    பகிர்வு நிறைவு..

    ReplyDelete