Saturday 4 August 2012

இருத்தலியல்-II

       இருத்தலியல் மனித அவலம்/மனிதத் துயரம் பற்றி முதன்மையாகப் பேசுகிறது.மனிதன் தன துயரத்திலிருந்து ,வேதனையிலிருந்து வீழ்ச்சியிலிருந்து விடுபட வழி தெரியாதவனாக இருக்கிறான் .மனிதன் தானே உருவாக்கிக் கொண்ட சூழலுக்குள் மாட்டிக் கொண்டான் .தனக்குள் தானே அன்னியமாகி போனான் தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் மேலும் அதிகமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான் .இவனுக்கு சுதந்திரம் இல்லை. இவன் அசலான மனிதன் அல்ல. பொருளும் அதிகாரமும் இவனுக்குள் இடம் பிடித்துக் கொண்டன .இயற்கையோடும் மனிதர்களோடும் இவனுக்கு இயல்பான உறவு இல்லை .தன வாழ்வுக்கான நெறிகளை -வாய்ப்புகளை தீர்மானித்துக் கொள்ளும் திறனற்றவனாக  இருக்கிறான். இவன் தன வேர்களை இழந்து விட்டான் . இவன தனக்காக இல்லை.இவன் வாழ்க்கையை பிறர் அபகரித்து கொண்டனர் .பிறர் இவனுக்குள் வாழ்கிறார்கள் இவ்வாறு இருத்தலியல் மனிதனின் இருத்தலியல் அவலத்தை சொல்கிறது .இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இரண்டு உலக போர்கள் மனிதனின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன .குறிப்பாக மேற்கத்திய மனிதனின் வாழ்க்கையை இவை மிக கடுமையாக பாதித்தன .ஜெர்மனியில் ஏற்பட்ட நாசிசமும் ,சோவியத் யூனியனில் ஏற்பட்ட கம்யுனிசமும் மனிதன் மீது அதிகாரத்தை அடக்கு முறையை பெருமளவு திணித்தன .இறந்சு நூற்றாண்டுகளாக வலுப்பெற்று வரும் தொழில் முறை ,முதலாளியப் போக்கு ,இவனை இயந்திரத்தின் பகுதியாக்கி விட்டன .தொடர்ந்து பெருகிவரும் வணிக கலாச்சாரம் இவனை வெறும் நுகர்பவனாக மாற்றின .இவனது புலன்களின் வேட்கையை தூண்டி இவன் முன் பொருட்களை குவித்து அவற்றை நோக்கி இவன் ஆசைகளை தூண்டி இவற்றின் மூலம்   வணிக கலாச்சாரம்  இவனை சிறை பிடித்தது .தனக்குள் சிதைந்து போன இந்த மனிதன் கடுமையான மனநோய்களுக்கு ஆட்பட்டான் .காமத்திலிருந்து இவனுக்கு விடுதலை இல்லை என்று இவனுக்கு உளவியல் சொல்லியது .சில   நூற்றாண்டுகளாக  வளர்ந்து வந்த விஞ்ஞானம் ,முதலில் அண்டத்துக்கு வெளியில் கடவுளைத் துரத்தியது .பின்னர் கடவுள் செத்து விட்டான் என்று அறிவித்தது .அறிவின் ஆட்சி மனிதனை விடுவிக்கும் என்று விஞ்ஞானம் கூறியது .உண்மையாகவில்லை .அரசு அதிகாரம் ஏகாதிபத்தியமாக உருவெடுத்து போர்களை உருவாக்கி ராணுவத்தை பெருக்கி கோடிக்கணக்கான மனிதர்களை அழித்தது.தொழிற்புரட்சியின் மூலம் உருவாகும் என நம்பிய மறுமலர்ச்சியும் ஒளியும் மனிதனுக்கு கிட்டவில்லை . மாறாக இவன் வாழ்வுக்குள் இருள் வந்து நிறைந்தது .இத்தகைய இருபதாம்   நூற்றாண்டு சூழல் தான் இருத்தலியல் என்ற மெய்யியலை முன்னுக்கு கொண்டு வந்தது ,அறிவின் அடக்கு முறைக்கு உள்ளாகியிருந்த மனிதனின் உள்ளுணர்வு -அதர்க்கம் விழித்துக் கொண்டது அறிவின் மூலம் மனிதனுக்கு விடுதலை இல்லை என்று இருத்தலியல் அறிவித்தது .மனிதன் மீண்டும் தன் அடிப்படைகளை நோக்கி திரும்ப வேண்டும் என்று இருத்தலியல் கூறியது .பழங்கால கிரேக்க சமூகத்தில் மனிதனும் இயற்கையும் பிரிவு படதா அறிவும் உணர்வும் பிரிவுபடாத சமூகச் சூழலை இருத்தலியல் மீண்டும் மனிதனுக்கு நினைவு படுத்தியது .ஏசுவை பற்றி மீண்டும் பேசியது
              வாழ்க்கையிலிருந்து எவையெல்லாம் பிரிக்கபட்டனவோ அவற்றையெல்லாம் மீண்டும் வாழ்க்கைக்குள் இணைக்க வேண்டும் பொருட்களுக்குள் சிறைபட்டவனை விடுவிக்க வேண்டும் .மனிதனை இயல்பாக மாற்ற வேண்டும் .மனிதன் வேறு எதற்கும் தன்னை இழந்து விடக்கூடாது .எதன் ஒட்டுறவிலும் தன்னைக் காணக்கூடாது .தன்னைத் தானாக தரிசனம் கொள்ள வேண்டும் . எல்லாச் சமயத்திலும் இது சாத்தியமில்லை .கடுமையான நோய், அதிர்ச்சி மரணத்தை எதிர்கொள்ளும் தருணம் ஆகிய சந்தர்பங்களில் தன் உணர்வுகள் உச்ச அளவில் தீவிரம் கொள்ளும்போது தன்னை பற்றி தான் செய்யவேண்டிய தேர்வு பற்றி தன் சுதந்திரம் பற்றி புரிதல் பெற முடியும் .மனிதன் தனக்குள் காணும் மன சிதைவு என்பது ஒரு நோய் அல்ல. தன்னைப்பற்றிய ஒரு தேடல் .தேடலின் ஒரு தொடக்கம் தொடர்ந்து தேடும்பொழுது தன்னை உருவாக்கி கொள்ள முடியும் .தன் சூழல்களை தன்னை சிறைபடுத்தியிருக்கும் சக்திகளை மனிதன் கடக்க முடியும் .தனக்குள் கடவுளைக் கண்டுகொள்ள முடியும்