Sunday, 6 November 2011

அந்நியமாதல்

1 என் கட்டுரைகள் சிலவற்றில் அந்நியமாதல் என்ற சொல் திரும்பத்திரும்ப வருவதைக் குறிப்பிட்டு முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் இச்சொல்லின் கருத்து எனக்கு விளங்கவில்லை சற்று விளக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார் (ஆய்வாளரின் பெயர் திருமதி ஆனந்த ஜோதி )

       வழக்கமாக ஆய்வு மாணவர்கள் இப்படி எல்லாம் கேள்வி எழுப்புவதில்லை இவர் கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது சுருக்கமாக பதில் சொல்வது சற்று சிரமம் என்றாலும் இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு விளக்கத்தை இங்குத் தர விரும்புகிறேன் .

   வேலையில்லை என்பதால் வேலைத்தேடி முன்பு அறிமுகமில்லாத அலுவலகம் ஒன்றிற்கு நாம் செல்கிறோம் . நெடுநேரம் காக்க வைத்த பிறகு அலுவலர் நம்மை அழைக்கிறார் அவர் நம்மை உட்கார சொல்லவில்லை .ஏறிட்டு பார்த்தபடி சில கேள்விகளை கேட்கிறார் சற்று சங்கடத்துடனேயே தடுமாறியபடி பதில் சொல்கிறோம் பிறகு நாளை வா என்று சொல்லி அனுப்புகிறார் இந்த சூழலில் அந்நியராக நம்மை உணர்கிறோம் .இது நமக்கு உரிமையான இடமில்லை நம்மை மரியாதையோடும் அணுகவில்லை தெரிந்த சில விவரங்களையும் அரைகுறைவாகவே சொல்லி வைக்கிறோம் ஏன் இங்கு வந்தோம் என்றிருக்கிறது  நமக்கு.

  இத்தகைய மனநிலையை பல்வேறு சமயங்களில் நமக்குள் உணர்ந்திருக்கிறோம் இன்னொரு உதாரணம்.

     நம் மாநிலத்தை விட்டு வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு செல்கிறோம் .சில தேவைகளுக்காக சிலரை  கேட்டாக வேண்டும் சரியான பதில் நமக்குக் கிடைப்பதில்லை அங்கு நாம் அந்நியர் ..இவனுக்கு இங்கு என்ன வேலை என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றுகிறது .

   திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் மணமகன்  வீட்டிற்கு செல்கிறாள் முற்றிலும் புதிய சூழ்நிலை வித்தியாசமான கலாச்சாரம் மணப்பெண் தடுமாறுகிறாள் சூழல் பெருமளவு மாறுகிறவரை அவள் இங்கு ஓர் அந்நியர்.

    முதலாளிய சமூகத்தில் ஏற்படும் அந்நியமாதல் பற்றி மார்க்ஸ் மிக நுட்பமாக சில விளக்கங்களைத் தருகிறார் . முதலாளிகள் விதிக்கும் வரையறைகள் கட்டுபாடுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு தொழிலாளி வேலைக்கு செல்கிறார் . எட்டுமணிநேர உழைப்பு உழைப்பில் முழுமையான கவனம் தேவை இடையில் அரைமணிநேர ஓய்வு அரட்டை அறவே கூடாது கொடுத்த வேலையை முடித்து வெளியேற வேண்டும் . பேசிய கூலிக்கு மேல் எதையும் எதிர்ப்பார்க்க கூடாது .இத்தகைய வரையறைக்குள் உழைக்கிற தொழிலாளி இங்கு ஓர் கூலிக்காரன் . கூலிக்காக உழைக்கிறான் மனைவி குழந்தைகளுக்காக வயிற்றுப்பசி தீர்வதற்காக உழைக்கிறார்  .. நாளடைவில் கட்டுப்பாடுகள் கூடுதலாகின்றன .உழைக்கிற இடத்தில் உரிமைக்கு இடமில்லை உறவை வளர்த்துக்கொள்ள முடியாது சற்றுக்கவனம் சிதறினாலும் ஏற்படும் பிழைக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் .

      தொடர்ந்து வேலையில் ஆர்வத்திற்கு இடமில்லை சொந்த வேலை என்றால் நிதானமாக செய்யலாம் .இடையிடையே ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்தவரிடம் பேசிக்கொண்டு இடையில் பாட்டும் கேட்டுக் கொண்டு உழைத்தால் போதும் தன் விருப்பத்திற்கு ஒத்த முறையில் வேலையில் மெருகேற்றலாம் ..ரசித்து வேலை செய்யலாம் .ஆனால் தொழிற்சாலையில் இதற்கு இடமில்லை .தான் ஒரு கூலிக்காரன் மட்டுமே .. தான் இங்கு மனிதனில்லை .கை கால் இருப்பது உழைப்பதற்காக  உழைப்பது வயிற்றுப்பசி தீர்வதற்காக .. வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? இதற்காகத்தான் வாழ வேண்டுமா ? இயந்திரத்தோடு இவர்  உழைக்கிறார் நாளடைவில் தானும் இயந்திரத்தின்  ஓர் பகுதி , கருவி .முதலாளிக்காக உழைத்து இவர்  தேய்கிறார்  . கூலிக்காரனுக்கு என்ன தன்மானம் வேண்டிக் கிடக்கிறது. மனம் ஒன்றி உழைக்க முடியவில்லை ..தனக்குத்தானே ஒரு கேலிப்பொருள்.

   தொழிலாளி இப்படித்தான் இந்த சமூக சூழலால் முதலாளிய சூழலில் அந்நியமாகிறார்.தொழிற்சாலையில் இவருக்கு வேறு இடம் எதுவுமில்லை வாழ்க்கை இவருக்கு கசக்கிறது .. வெறுப்பு ஏறுகிறது . எதற்கு நான் வாழ வேண்டும் குறைந்த கூலிக்கு உழைக்கிறார்  வீட்டிலும் மரியாதை இல்லை உறவுகளோடு ஓட்ட முடியவில்லை தனக்குள்ளும் இவர்  அந்நியன் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன் எனக்கு நானே பகையாகி விட்டேன் ,தற்கொலை கூட இனி ஒரு சுகம் தான் .இது சுய அந்நியமாதல் என்கிறார் மார்க்ஸ் .

   தொழிலாளியை முன்வைத்து அந்நியமாதலை மார்க்ஸ் விளக்கினார் இன்றைய சமூக சூழலில் நம்மை ஒரு புள்ளியில் வைத்து நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்பி கொள்வோம் .நம் வாழ்வு நமக்கு நிறைவு தருவதாக இருக்கிறதா ? யாருக்காக உழைக்கிறோம்? வேறு எவர் தேவையை நிறைவேற்றுவதற்க்காக நாம்  உழைக்கிறோம்? . நம்மை வைத்து மற்றவர் செல்வம் சேர்க்கிறார்கள்  பிறர் அதிகாரத்திற்கு நாம் சேவகம் செய்கிறோம் பிறர் நியாயத்தை நாம் ஏற்றாக வேண்டும் அதிகாரி செய்வது அநீதி என்றாலும் அதற்க்கு நாம் கட்டுப்பட வேண்டும் .உண்மை எது என்று தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த  முடியாது .நமக்கு தெரிந்த நீதியை செயல் படுத்த முடியாது . சுயமாக நம்மால் செயல்பட முடியாது நமக்கு சுயம் என ஓன்று தேவையில்லை . கணவனுக்கு மனைவி கட்டுப்பட வேண்டும் .. அதிகாரிக்கு ,அரசுக்கு முதலாளிக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் மற்றவர் நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள் .பிறர் விதிக்கும் கட்டுபாடுகளை ஏற்று நம்மை நாமே இழக்கிறோம் நம்மை நாமே நொந்து கொள்கிறோம் ஒரு வகையில் மனநோய்க்கு ஆட்படுகிறோம் கடவுளே எது என்ன சோதனை என்று ஓலமிடுகிறோம் ..எனக்கென ஒரு ஆன்மா உண்டா என்று கேட்கிறோம் உலகம் என்ன ஆயிற்று என் தலைவிதியை நிர்ணயிப்பது யார் ? கடவுள் படைத்த உலகு தானா இது ? கடவுள் என ஒருவர் உண்டா ? இது அந்நியமாதல் .

2. இடையில் ஆனந்தி எதுவும் கேட்கவில்லை என்றாலும் அவருக்குள் இன்னொரு கேள்வி எழுந்திருக்ககூடும் அந்நியமாதல் என்ற சிக்கல் முதலாளிய சமூக சூழலில் தோன்றியது  போல தோன்றினாலும் தொன்மைக் காலம் முதற்கொண்டே இத்தகைய சிக்கலில்தான் மனிதன் அகப்பட்டு இருந்ததாக தோன்றுகிறது . இப்படிதானா என்றும் இதற்கான விளக்கம் என்னவென்றும் அந்நியமாதலைத் தவிர்க்க முடியாதா என்றும் அந்நியமாதல் என்ற சிக்கல் என்று தீரும் என்றும் தொடர்ச்சியான கேள்விகள் நமக்குள் எழலாம் .இவை பற்றியும் இங்கு சுருக்கமாக வேணும் கூற வேண்டும் 

   முதலாளிய சூழலில் தொழிலாளி தனக்குள் அன்னியப்பட்டு இருப்பதை உணராமல் இருக்க முடியாது . தன் அடிமைத் தனத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் முதலாளிய சூழலுக்கு எதிராக அவன் போராட வேண்டும் . பிற தொழிலாளிகளோடு இணைந்து முதலாளிய சூழலுக்கு எதிராக தமக்கு இயன்ற வகையில் ஒன்றிணைந்து போராடியே ஆக வேண்டும். முதலாளிய சூழல் என்பது தொழிலாளிகளை மட்டுமல்லாமல் பிற மனிதர்களையும் தனக்குள் அகப்படுத்திக் கொண்டிருக்கிற சூழல் இந்த சூழலும் நெடுங்கால வரலாற்றோடு இணைந்து முன்னையதன் தொடர்ச்சியாகத் தான் இருக்கிறது .

    இங்கு இன்னொன்றை சொல்ல வேண்டும் முதலாளிய சூழலில் தாங்கள் அகப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளாதவர்கள் அந்நியமாதல் என்ற சிக்கலை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் தான் அகப்பட்டுள்ள துயரத்தை தீர்த்துக் கொள்ள முடியும் என நம்பி சிலர் கடவுளை சரணடையலாம் சிலர் கோவில் வழிபாடு சடங்குகள் சாத்திரங்கள் என்பனவற்றுக்குள் தனக்கு விடுதலைக் கிட்டும் எனத் தேடி அலையலாம்.

   இன்னும் சிலர் இந்த சூழல் நெருக்கடியில் இருந்து  தப்பும் முறையில் மதுவுக்குள் பாலுறவுக்குள் சூதாட்டத்திற்குள் வேற்று வேடிக்கைகளுக்குள் தன்னை மூழ்கடித்து கொள்ளலாம் தம் துயரத்தை மறக்க வேண்டும் என்ற முறையில் இப்படி சில மயக்கங்களில் பிரம்மைகளில் ஆழ்த்திக் கொள்ளும் இவர்களுக்கு இவை நிரந்தரமான விடுதலையை தருவதில்லை மயக்கம் தீர்ந்த நிலையில் துயரங்கள் இவர்களை பற்றிக் கொள்கின்றன .

     துயரம் எங்கு தொடங்கியது என்ற உணர்வு இல்லாத இவர்கள் தம் உடனடி துயரத்திற்கு தனக்கு அண்மையில்  உள்ளவர்கள் தான் காரணம் என்று மனைவியோடு அண்டை அயலவர்களோடு இவர்கள் சச்சரவு செய்யலாம் அவர்களை தாக்கலாம் கொலையும் செய்யலாம் போட்டி பொறாமை வம்பு வழக்குகள் முதலியவை இதன் காரணமாகத்தான் நிகழ்கின்றன ..

    படித்தவர்கள் என்ன செய்கிறார்கள் அலுவலகத்தில் அதிகாரியின் அடக்கு முறைகளுக்கு உள்ளாகி அலுவலகப் பணிகளை கடனே என்று செய்து முடித்து விட்டு  அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு வெளியில் வரும் போது இவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது இசை கலை இலக்கியம் என்று இவற்றில் ஈடுபடுகிறார்கள்  இவ்வகை பணிகளில் ஈடுபடும் போது தங்களுக்குள் உயிரியக்கத்தை காண்பார்கள் இது போதும் என்று கருதுவார்கள் கலை முதலிய படைப்புகள் இம்முறையில் தான் இவர்களால் படைக்கபடுகின்றன. உண்மையில் இவர்களும் அந்நியமாதல் என்ற சிக்கலுக்கான வரலாற்று சூழல் எது என்பதை புரிந்து கொள்வதில்லை . வேலை ஒரு புறம் இலக்கியம் இன்னொரு புறம் இப்படி இவற்றுக்குள் இவர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள் சமரசம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதும் ஒரு சிக்கல் தான்.

     இனி அந்நியமாதல் என்ற சிக்கல் தோன்றிய வரலாற்று சூழல் பற்றி சுருக்கமாக பார்க்கலாம் மார்க்ஸ் தரும் விளக்கத்திற்குள் தான் மீண்டும் செல்ல வேண்டியிருக்கிறது மிகமிக தொன்மைக் காலத்தில் காடுகளில் மனிதன் வேட்டையாடி இயற்கையில் கிடைபனவற்றை உண்டு ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த காலம் என ஓன்று இருந்தது . இயற்கையில் கிடைத்தவற்றை வேட்டையில் கிடைத்தவற்றை பலரும் தமக்குள் பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை ஆண்டான் அடிமை இல்லை தொன்மை காலம் பற்றி இப்படிதான் நாம் ஒரு சித்திரம் வரைந்து கொள்ள வேண்டியிருக்கிறது .. இதன் பின்னர் தான் தனியுடமை குடும்பம் அரசு முதலியவை தோன்றின முன்னர் இயற்கை யோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தன்னிலிருந்தும் பிரிந்து பிளவுபட்டு அன்னியமானான் இப்படிதான் மார்க்ஸ் கூறுகிறார் . இயற்கையை ஒரு சிலர் வசப்படுத்திகொண்டார்கள் .அதாவது நிலத்தை காடுகளை ஒரு சிலர் வசப்படுத்தி கொள்ள மற்றவர்கள் இவர்களுக்கு அடிமைகள் ஆனார்கள் சமூகத்திற்குள் இப்படி ஏற்றதாழ்வுகள் தொடர்ந்து வளரும் போது சமூகம் தனக்குள் பிளவு படுகிறது கூட்டுணர்வு குலைகிறது மனிதன் தனியன் ஆகிறான். .சிலருடைய ஆதிக்கத்திற்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் சிலருக்கு சொத்து உரிமை, அரசதிகாரத்தில் ஒரு சிலர், உடைமையை அதிகாரத்தை சேகரிப்பதற்காக போர்கள், போட்டிகள்,பலரை அடிமைபடுத்தல், குடும்பம் என்ற வரையறைக்குள் பெண்ணை அடிமைபடுத்தல், சமூகத்திலிருந்து இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மனிதனுக்கு நேர்வது அவலம், துயரம், முன்னைய சமூகத்திலிருந்த பாதுகாப்பு  ஒத்த உறவு, ஒத்த உணர்வு, அமைதி, இப்பொழுது இவனுக்கில்லை என்ன நேர்ந்தது என்பது இவனுக்கு தெரிவதில்லை. பல நூற்றாண்டுகள் அல்லது ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குள் இது நேர்ந்திருக்கிறது வரலாற்றுத் தொடர்ச்சி இவனுக்கு தெரியவில்லை. தனியுடைமை,அரசதிகாரம் ஆகியவை தான் தன் துயருக்கு காரணம் என்பது இவனுக்கு தெரியாது. வரலாற்று சூழல் தெரியாத நிலையில் அதற்குள் முற்றாக அகப்பட்டு கொண்டவன் இவன். எங்கெங்கோ தேடுகிறான் அலைகிறான் துயருக்கு காரணத்தை  தனக்குள்ளும் தேடுகிறான் . தன் ஆசை காரணமாக இருக்குமோ ?பெண் இன்பம் காரணமாக இருக்குமோ ? பிறப்பே இதற்கு காரணமாகுமோ? பிறப்பை தவிர்ப்பது எபபடி?? பெண்ணை தவிர்க்க வேண்டும் .ஆசைகளை துறக்க வேண்டும் துறக்க முடிவதில்லை. நான் எங்கிருந்து வந்தேன் . என்னை படைத்தவர் யார் ? எந்தக் காரணத்திற்காக படைத்தார்  ? துயரத்தை ஏன் கொடுத்தான் இப்படி தொடரும் துயருக்கு என் முன்வினை காரணமா? வினை எபபடி அறுபடும் ஆசைகளுக்கு புலன்கள்  காரணம் புலன்களை ஒடுக்க வேண்டும் . சமயங்கள் இப்படிதான் தோன்றுகின்றன .
   அந்நியமாதல் என்ற குறிப்பிட்ட வரலாற்று சூழலில் தான் சமயங்கள் ,கடவுள்,வினை,மோட்சம் ,நரகம்,முதலியவை தோன்றின .இதற்கான வரலாற்றை விளக்கியவர் மார்க்ஸ். வரலாற்றுக்கு வெளிச்சம் தந்தவர் மார்க்ஸ்.

    சமயங்கள் இலக்கியங்கள் கலைகள் ஆகியவை வரலாற்று சூழலில் தான்  தோன்றின.இந்த உண்மை அவர்களுக்கு அன்றைய சூழலில் புலப்படவில்லை என்றாலும் இவர்கள் தம் சூழலுக்கு எதிர்வினை என்ற முறையில் சமயம் , இலக்கியம், முதலியவற்றைப் படைக்கிறார்கள். அந்நியமாதல் என்ற சூழலில் இருந்து விடுபடாத நிலையிலும் இவர்கள் படைக்கிறார்கள்   உண்மையில் சமயவாதிகள், மெய்யியலாளர், கலைஞர் ஆகியவர் தமக்கு முன் உள்ள இயற்கையோடும் சமூகத்தோடும் பிரபஞ்சதோடும் இரண்டறக் கலந்து விட வேண்டுமென்ற பேராசையோடு தம்மளவில் உடைமைபற்று அதிகாரப்பற்று முதலிய எவையும் இல்லாமல் அதே சமயம் இயற்கை முதலியவற்றோடு தாம் இரண்டறக் கலக்கும் முயற்சியின் போதே அவற்றை உட்செரித்து  கொள்வதன் மூலம் அவற்றிலிருந்து ஆற்றலையும் மிக விரிந்த அளவிலான பார்வையையும் பேரழகையும் தாம் பெற்று தம் படைப்புகளை உருவாக்குகின்றனர். தம்மை இழந்து படைக்கின்றனர். வெளியில் இருப்பதாக சொல்லப்பட்ட  கடவுளரை தமக்குள் வயப்படுத்திகொள்கின்றனர் தமக்குள்ளும் சொர்கத்தை காண்கின்றனர். தமக்குள்ளும் கருணை வெள்ளமாய்  பெருகுவதை காண்கின்றனர். தொன்மை சமூகத்தின் ஏற்றத்தாழ்வற்ற பேருணர்வை தமக்குள் பெருகின்றனர். இந்தப் பேருணர்விலிருந்தே  தம் கால அறிவு சூழலுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒத்த முறையிலான படைப்புகளை தருகின்றனர் . அந்த பேருணர்வின் ஒரு சில கூறுகளேறும் இவர்கள் படைப்பில் இருக்கின்றன . அக்கால சூழலில் இவர்கள் அறிஞர்கள் மனித விடுதலையை நேசிப்பவர்கள் என்றெல்லாம் இன்றைய பார்வையிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும் இவர்களை எதிர் நிலையில் வைத்து  பார்க்கும் தவறை நாம் செய்ய கூடாது .ஆக்க முறையில் பார்க்க வேண்டும்.

1 comment:

  1. படித்தவர்கள் என்ன செய்கிறார்கள் அலுவலகத்தில் அதிகாரியின் அடக்கு முறைகளுக்கு உள்ளாகி அலுவலகப் பணிகளை கடனே என்று செய்து முடித்து விட்டு அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு வெளியில் வரும் போது இவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது இசை கலை இலக்கியம் என்று இவற்றில் ஈடுபடுகிறார்கள் இவ்வகை பணிகளில் ஈடுபடும் போது தங்களுக்குள் உயிரியக்கத்தை காண்பார்கள் இது போதும் என்று கருதுவார்கள் கலை முதலிய படைப்புகள் இம்முறையில் தான் இவர்களால் படைக்கபடுகின்றன. உண்மையில் இவர்களும் அந்நியமாதல் என்ற சிக்கலுக்கான வரலாற்று சூழல் எது என்பதை புரிந்து கொள்வதில்லை'' இந்த வரிகள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அந்நியமயமாதல் குறித்தும் நம் அகச்சூழல் குறித்தும் மிக அருமையாக கூறுகிறார். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete