Wednesday 27 June 2012

இருத்தலியல் ஒரு சிறிய அறிமுகம்

இருத்தலியல்  என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் தேடும்பொழுது  காமுவின் தி மித் ஆப் சிசிபஸ் என்ற ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது .சிசிபஸ் என்பவன் ஒரு கிரேக்க வீரன் .அவன் செய்த தவறுக்காக தெய்வங்கள் அவனுக்கு ஒரு தண்டனை விதிக்கின்றன .என்ன தண்டனை ? ஒரு பெரிய கல் உருண்டையை அருகிலிருக்கும் மலைச்சிகரம் நோக்கி அதை அவன் உருட்டிக் கொண்டே மேலே செல்ல வேண்டும் .உச்சியை அடைந்த உடன் அந்த கல் உருண்டையை விட்டு விட வேண்டும் .கல் உருண்டை கிழே மலை அடிவாரத்திற்கு போய்ச்சேரும் திரும்பவும் அவன் கிழே வந்து மீண்டும் அக்கல்உருண்டையை சிகரம் நோக்கித் உருட்டி செல்ல வேண்டும் ..உச்சியிலிருந்து பாறை கிழே உருண்டு வரும் .இப்படியே அவன் செய்து கொண்டே இருக்க வேண்டும் இது அவனுக்கு விதிக்க பட்ட தண்டனை .
   கிரேக்க புராணத்தில் இப்படி ஒரு கதை.இக்கதைக்கு என்ன பொருள் ? சிசிபசுக்கும் நமக்கும் ஏதேனும் உறவு இருக்கிறதா ? இருக்கிறது என்கிறது இக்கதை .ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்கிறோம்? காலையில் எழுகிறோம்.காலைகடன்களை முடித்து கொண்டு சிற்றுண்டி அருந்தி அலுவலகம் செல்கிறோம் .அங்கு நமக்குத் தரப்படும் அலுவலை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்புகிறோம் .இரவு உணவுக்கு பிறகு உறக்கம் மீண்டும் காலையில் எழுந்து அதே வேலையை செய்கிறோம்.யாரோ  நமக்கு கொடுத்த வேலை .யாருடைய தேவையோ நாம் நிறைவேற்றுகிறோம் . இதற்காக நமக்கு ஊதியம். ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறோம். அலுப்பு ஏற்படுகிறது .நொந்து கொள்கிறோம். வேறு வழியில்லை . குழந்தைக்காக குடும்பத்திற்காக உழைத்தாக வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை சுழற்சிக்குள் நாம் அடைப்பட்டுக் கிடக்கிறோம் தப்ப முடியாது .
  இதுதான் நமக்கு விதி என்றால் நம் குழந்தைகளுக்கு நாம் வைத்திருக்கும் விதி என்ன? அவர்கள் படிக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும் .அடுத்தவனுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும். அதற்க்கான கூலியை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம் திருமணம் .குழந்தைகள் பிறக்கின்றன .அவற்றுக்காக உழைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதே போன்ற வாழ்க்கை .மனைவிக்கு மட்டும் வேறு என்ன விதி .குடும்பத்திற்குள்ளும் இதே சுழற்சி. குழந்தை பேறு ,படிப்பு ,எவருக்காகவோ சம்பாதித்து கொடுப்பதற்காக படிப்பு .மூளையில் கலவியை/கணக்கை  திணித்து கொள்ள வேண்டும் .அது நமக்குள் செரிக்கிறதா ? இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை .கூலி வேலை செய்ய கல்வி கூலி அதிகம் வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகமான உழைப்பு இதற்காக பள்ளிகள் ,கல்லூரிகள் பாடத்திட்டங்கள் ,ஆசிரியர்கள்,அதிகார நிறுவனங்கள் காலங்காலமாக இவையெல்லாம் யாரோ வகுத்த வட்டத்திற்குள் சுற்றி வருகிறோம் .ஓடுகிறோம் ,கலைத்து போகிறோம் சீக்கிரம் சாவு வந்தால் நல்லது .
 சிசிபசுக்கு எதற்காகவோ யாரோ தண்டனை விதித்தார்கள் நமக்கும் இதே போல ஒரு தண்டனை யார் விதித்தார்கள் ,இதில் என்ன மகிழ்ச்சி இதிலிருந்து விடுதலைக்கு வழி உண்டா? இந்த சுழற்சியிலிருந்து கிடைக்கிற விடுதலை எப்படி இருக்கும் ? விடுதலை பற்றி நமக்கு ஏதேனும் கனவு உண்டா ? எதற்காக இந்த வாழ்க்கை ? இந்த வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? கடவுள் நமக்கு இப்படி வழி செய்தாரா? இப்படி விதித்தவர் கடவுளாக இருக்க முடியுமா ? சுழல் ஓட்டத்தின் வழியே கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் .இப்படி விதித்தவர் கடவுள் இல்லை என்றால் விதித்தது சாத்தானா? சாத்தானும் கடவுளும் வேறு வேறா ? இல்லை ஒன்றா ? காலங்காலமாக இந்த வாழ்வில் என்ன தான் நடக்கிறது ,வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையா? வாழ்கையே ஒரு அபத்தம் உயிரோடு இருக்கும் வரை இந்த அபத்தத்தை சகித்து கொள்வது இந்த அபத்ததிலிருந்து சாவு தான் நம்மை விடுவிக்கும் என்றால் சாவு விரைவில் வரட்டும் .
  வாழ்வின் அர்த்தம் நமக்குத் தெரியாத போது நாம் ஏன் குழந்தைகளை ஓயாமல் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் இதற்காக குடும்பம் மனைவி சம்பாத்தியம் அலுவலகம் நிறுவனம் எதற்கேனும் அர்த்தம் உண்டா ? அர்த்தமற்ற இந்த சுழற்சியிலிருந்து இவற்றின் மூலம் நமக்கு விடுதலை உண்டா ?
    இருத்தலியல் நம் வாழ்க்கை பற்றி இப்படி ஒரு கேள்வியை  முன்வைக்கிறது  .மேற்குலகில் இரண்டு உலகப்போர்கள் மாபெரும் அழிவை ஏற்படுத்த்தின கோடிகணக்கான மனிதர்கள், குழந்தைகள் பெண்கள் கொல்லப்பட்டார்கள் .இக்கடுமையான சூழலில் இருந்துதான் இருத்தலியல் என்ற தத்துவம் வெளிப்பட்டது இத்தனை பெரிய பேரழிவுகளுக்கு என்னதான் அர்த்தம் ,கடவுள் என ஒருவர் இருந்தால் இவை நடைபெற்று இருக்குமா ? இத்தகைய கேள்வியிலிருந்து மேலும் எத்தனையோ கேள்விகள் ,கடவுள் தான் உலகைப்படைத்தாரா  உயிர்களைப் படைத்தாரா ? இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் கடவுளின் படைப்பு தானா ? கடவுள் என ஒருவர் இருந்தால் கோடிகணக்கானவர்கள் இப்படி சாவார்கள் என்றால் பிரபஞ்சத்தை அவர் எப்படி படைத்திருக்க முடியம் ? அறிவியல் ஆய்வுகள் தெளிவாக சொல்கின்றன .பிரபஞ்சம் படைக்கப்படவில்லை .ஒரு மாபெரும் வெடிப்பு அதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது .தோன்றிய பிரபஞ்சம் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது .இதே பிரபஞ்சம் எத்தனையோ லட்சம் கோடி ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுருங்கி மேலும் சுருங்கி ஒரு மாபெரும் கருந்துளையாகும் .பிறகு அது மீண்டும் வெடிக்கும் பிரபஞ்சமாக விரிவடையும் .இது ஒரு ஓயாத இயக்கம் .கடவுள் இதை படைக்கவில்லை .படைத்திருக்க முடியாது .படைக்கவும் முடியாது. கடவுள் படைத்தார் என்ற ஒரு கதையை வைத்தே சமயங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ..சாமியார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .கோவில்கள் ,உருவங்கள்,சாத்திரங்கள் எல்லாமே இந்த அபத்ததிலிருந்தே தோன்றின .சமயங்கள் நம் வாழ்கையை அடைத்து கொள்கின்றன சாமியார்கள் நம்மை அடைத்துக் கொள்கிறார்கள்.
   இருத்தலியல் தத்துவம் பற்றி மேற்குலகில் எத்தனையோ விளக்கங்கள் ,எத்தனையோ அறிஞர்கள் வண்டி வண்டியாக நூல்கள் எழுதப் பட்டுள்ளன . தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன. படித்துப் பார்க்கலாம் .குறிப்பாக எஸ் .வி. ராஜதுரை எழுதிய நூல்கள்
    ஓயாமல் இயங்கும் பிரபஞ்சத்தின் இயக்கத்திலிருந்து அண்டங்கள் பால்வெளி மண்டலம் இதற்குள் நம் சூரியன் சூரியனை சுற்றி பல கோள்கள் .இவற்றில் ஒன்று நம் உலகம் இதிலிருந்து இயற்கை ,தாவரங்கள் ஊர் வகைகள் பரிணாமம்  இறுதியாக மனிதன் .இவையனைத்துமே பரிணாமம் என்ற ஒன்றிலிருந்து இன்னொன்று அதிலிருந்து இன்னொன்று இப்படியே தோன்றின .மாறின / நுட்பங்கள் கூடின இதிலிருந்து உயிரியக்கம் எல்லாமே தற்செயல் யாரும் உள்ளிருந்து அல்லது வெளியிலிருந்து தோற்றுவிக்கவில்லை /படைக்கவில்லை
   பிரபஞ்சத்தை கடவுள் தான் தோற்றுவித்தார் என்றால் அவர் என்ன நோக்கத்தோடு படைத்தார் .இத்தனை பிரமாண்டமான பிரபஞ்சத்தை ஏன் படைக்க வேண்டும் .இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு புள்ளி கூட இல்லை .அதனினும் மிக மிக சிறிய ஓர் உயிர். இவனுக்காகவே இந்த மாபெரும் பிரபஞ்ச படைப்பு. கடவுள் செய்தது அபத்தம் அவர் என்ன திட்டத்தை வைத்து இவற்றையெல்லாம் செய்தார் .கடவுள் ஏதோ ஒரு நோக்கத்திற்காக மனிதனை படைத்தார் என்று சமயம் கூறுகிறது .குறிப்பிட்ட இந்த சமயத்தை படைத்த ஒரு சமயவாதிக்கு கடவுளின் நோக்கம் எப்படி புலப்பட்டிருக்க முடியும் .புலப்பட்டது என்று சொல்வது ஒரு கதையின்றி  வேறென்ன இப்படி எத்தனையோ விவாதங்கள் ,கடவுள் தான் எல்லாவற்றையும் படைத்தார் என்றாலும் எத்தனையோ பிரச்சனைகள் எத்தனையோ சிக்கல்கள் இவற்றையெல்லாம் சமயவாதிகள் விளக்க முடியாது .உலகப்போரை ,சுனாமியை ,எரிமலைகளை ,மாபெரும் வெள்ளத்தை ,புயல் காற்றை ,கொள்ளை நோய்களை அணுகுண்டு  வெடிப்பை ,கடைசியாக ஈழப்போரை,நித்தியானந்தரை இவர்கள் விளக்க முடியாது .கதைகள் சொல்லிக் கொண்டே காலம் தள்ளுகிறார்கள் .அரசியல் வாதிகளை போல இவர்களும் பொய்களில் புழுத்துக் கொண்டிருகிறார்கள்
   வாழ்க்கை அபத்தம் என்றால் நாம் செய்ய வேண்டியது என்பதற்கு இருத்தலியல் சொல்லும் ஒரு வழி தற்கொலை .தற்கொலை புனிதமானது .இன்னொரு வழி வாழ்க்கை ஒரு அபத்தம் .வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றாலும் அர்த்தம் தர முடியும். காமு சொன்ன படி கொள்ளை நோயை ஒழிக்க வேண்டும் .கொள்ளை நோய் வந்தவனை மருத்துவர் காப்பாற்ற வேண்டும் .இப்படிதான் அர்த்தமற்ற வாழ்வுக்கு நாமாக அர்த்தம் தேடிக் கொள்ள முடியும் .அக்கிரமங்களை ஏற்க முடியாது .எதிர்த்தாக வேண்டும் .அக்கிரமம் /ஆதிக்கம் /அழிவு செய்வோர்களை அழித்து மக்களை/ இயற்கையை காப்பாற்ற வேண்டும் .அதன் பிறகு நிம்மதியாக சாகலாம்

1 comment:

  1. அக்கிரமங்களை ஏற்க முடியாது .எதிர்த்தாக வேண்டும் .அக்கிரமம் /ஆதிக்கம் /அழிவு செய்வோர்களை அழித்து மக்களை/ இயற்கையை காப்பாற்ற வேண்டும் //

    க‌ற்பித‌ங்க‌ளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் ச‌மூக‌த்தை நிறுத்தி நிதானிக்க‌ச் செய்யும்ப‌டியான‌ க‌ருத்துக‌ள்!

    ReplyDelete